Sunday, March 17, 2013

Bharathiyar - 1

முரசு 

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம் ;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

கண்கள் இரண்டில் ஒன்றை - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளரிவை வளர்த்தல் - வையம்
பேதமை யற்றிடுங் காணீர் .

நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே! - பொய்மைச்
சாதி வகுப்பினை எல்லாம்.
...
அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக் குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது  - புவி
யெங்கும் விடுதலை செய்யும்

வயிறுக்கு சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம் ;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

ஒன்றெண்டு கொட்டு முரசே! - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே! - இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

- பாரதியார்

No comments:

Post a Comment